2. காவியத்தின் பயன்
ஆசிரியருக்கு பாபா பெயரிடுதல்
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி! குலதேவதைக்கும்
ஸ்ரீ ஸீ தாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
கடவுள் வாழ்த்து முதல் அத்தியாயத்தில் கூறப்பட்டது; குலதேவதைகளுடைய கடாக்ஷத்தையும் ஸத்குருவினுடைய கடாக்ஷத்தையும் வேண்டிப் பாடிவிட்டோம். ஸாயீயின் வாழ்க்கைச் சரித்திரத்திற்கு விதை போட்டாகிவிட்டது. இப்பொழுது இக் காவியம் எழுதுவதன் பிரயோஜனம் என்னவென்று பார்ப்போம். யார் இந்தக் காவியத்தை அவசியம் படிக்கவேண்டுமென்பதும் இக் காவியத்திற்கும் இதன் நாயகனுக்கும் என்ன சம்பந்தம் என்பதும் இப்போது சுருக்கமாகச் சொல்லப்படும். இதுவே வாசகர்களுக்கு இக் காவியத்தை சிரமம் ஏதுமின்றி அறிமுகப்படுத்திவிடும். முதல் அத்தியாயத்தில், கிராமமக்கள் அதிசயிக்கும் வகையில் பாபா கோதுமைமாவு அரைத்து, எப்படிக் காலரா கொள்ளைநோயை விரட்டினார் என்று பார்த்தோம்.
ஸாயீயின் அற்புதமான லீலைகளை நான் கேட்டவுடன் என் மனம் ஆனந்தவெள்ளமாகியது; அன்பு பொங்கி வழிந்தது. அவ் வெள்ளமே கரைபுரண்டு இக் காவியம் ஆகிறது. ஆகவே, நான் என்னுடைய முழுத்திறமையுடன் ஸாயீயின் அருள் வெளிப்பாடுகளை விவரிக்க வேண்டும் என்றெண்ணினேன். இவ்விவரணம் பக்தர்களுக்குப் போதனையாகவும் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாகவும் அமையும். ஆதன், நான் இக் காதைகளை ஆரம்பிக்கும் வாயிலாக, இவ்வுலகத்திலும் மேலுலகத்திலும் சுகமளிக்கும் புனிதமான ஸாயீயின் சரித்திரத்தை எழுதுவதை மேற்கொண்டுவிட்டேன்.
ஒரு மஹானின் வாழ்க்கைச் சரித்திரம் அறவழியில் வாழ்வதற்குண்டான பாதையாகும்; நியாய சாஸ்திரமோ தர்க்க சாஸ்திரமோ அன்று. ஆகவே, ஒரு மஹானின் அருளுக்குப் பாத்திரமாகும் யோக்கியதை உள்ளவர்களுக்கு, எதிர்பாராததாகவோ அயலாகவோ எதுவும் இச் சரித்திரத்தில் இருக்காது. வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான காதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலி ''என்னோடு இரவுபகலாக பல ஆண்டுகள் அன்னியோன்னியமாக வாழ்ந்த அருமை நண்பனைப்பற்றியே என்னால் சொற்சித்திரம் வரையமுடியவில்லை; ஒரு மஹானின் சரித்திரத்தை என்னால் எப்படி எழுதமுடியும்?--
''என்னுடைய அந்தரங்கமே எனக்கு முழுமையாக விளங்கவில்லை; நான் எப்படி ஒரு மஹானின் சிந்தனைகளையும் போதனையையும் பிழைகள் ஏதுமின்றி விவரிக்க முடியும்?--
''ஆத்மாவின் உண்மையான சுபாவத்தை விவரிக்கும் முயற்சியில் நான்கு வேதங்களும் தோல்வியடைந்து மௌனமாகிவிட்டன. உம்முடைய உண்மையான சுபாவத்தை யான் எங்ஙனம் அறுதியிட்டு விவரிப்பேன்? ஓ ஸாயீ!
ஒரு மஹானால்தான் இன்னொரு மஹானைப் புரிந்துகொள்ள முடியும். நிலைமை இவ்வாறிருக்க நான் எப்படி மஹான்களை விவரிக்க முடியும்? என்னுடைய தகுதியின்மை எனக்கு நன்கு தெரிந்திருக்கிறது.
ஏழ்கடல் நீரையும் அளந்துவிடலாம்; பரந்த வானத்தையும் மூடிவிடலாம்; ஆனால் ஞானிகளை முழுவதும் அறிந்துகொள்வதென்பது மானிடனால் ஆகாத காரியம்.
நான் ஒரு பாமரன் என்பதை நன்கு அறிவேன். ஆயினும், பாபாவின் எல்லையற்ற சக்தியையும் பிரபாவத்தையும் வர்ணித்துப் பாடவேண்டுமென்ற அடக்கமுடியாத ஆசை என்னுள்ளே எழும்புகிறது; இதைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
ஜயஜய ஸாயீராயா! ஏழை எளியவர்களின் புகடமே, ஆழங்காணமுடியாத உமது மாயையை விவரிக்கவே இயலாது. விசுவாசமுள்ள தாசனான (அடிமையான) எனக்கு அருள்புரிவீராக!
உம்முடைய இதிஹாஸத்தை எழுதவேண்டுமென்று நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். அதே நேரத்தில், என்னால் செய்யமுடியாத காரியத்தை ஆரம்பித்துவிட்டேனோ என்று பயப்படுகிறேன். என்னைப் பார்த்து உலகம் கைகொட்டிச் சிரிக்காமல் ரக்ஷிப்பீர் ஐயனே!
இருந்த போதிலும், நான் எதற்காக பயப்படவேண்டும்? ஞானிகளின் சரித்திரத்தை எழுதுபவர்கள் கடவுளால் நேசிக்கப்படுகிறார்கள் என்று ஞானேச்வர் மஹாராஜ் அவர்களே எடுத்தியம்பியிருக்கிறாரே!
அந்தக் கடவுளேதான் என் இதயத்துள் புகுந்து, 'எழுது' என்று உணர்வூட்டியிருக்கிறார். ஆகவே யான் மூடமதி படைத்தவனாயினும், அவருடைய வேலையை எப்படிச் சிறப்பாக நடத்திக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.
பக்தர்கள் எவ்விதமாகச் சேவை செய்யவேண்டுமென்று தீர்மானம் செய்தாலும், வாஸ்தவத்தில் ஞானிகள்தாம் பக்தர்கள் மூலமாக சேவையைச் செய்துகொள்கிறார்கள். இதுவிஷயத்தில் உணர்வூட்டுதலை ஞானிகளே செய்கின்றனர்; பக்தர்கள் வெறும் கருவி மாத்திரமே!
சுருங்கச் சொன்னால், என்னைப் போன்ற ஒரு ஞானமில்லாத மடையனின் மூலமாக ஸாயீ தம்முடைய சரித்திரத்தை எடுத்தியம்புகிறார். நாம் பயபக்தியுடன் படிக்க வேண்டிய இக் காதையின் பெருமை இதுவே. ரிஷிகளும் ஞானிகளும், ஏன், ஸ்ரீஹரியும்கூட அவர்கள் கருவியாகத் தேர்ந்தெடுத்த மானிடனின் சிரசின்மேல் கையை வைத்துத் தங்களுடைய புராணங்களைத் தாங்களே எடுத்தியம்புவர். உதாரணமாக, சக வருஷம் 1700 (கி.பி.1778) இல் மஹீபதி என்பவருக்கு உணர்வும் எழுச்சியுமூட்டி, ஸாதுக்களும் ஞானிகளும் அவரைத் தங்களுடைய சரித்திரங்களை எழுதவைத்தனர். அவருடைய ஸேவையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதுபோலவே, சக வருஷம் 1800 (கி.பி.1878)இல் கவி தாஸகணுவை எழுதவைத்துப் பிற்கால ஞானியர்களின் சரித்திரங்கள் எழுதப்பட்டு, அவருடைய ஸேவையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக மக்கள் பரிசுத்தத்தையும் உயர்வையும் அடைந்தனர். பக்த விஜயம், பக்தலீலாமிருதம், ஸந்த (ஸாதுக்கள்) விஜயம், ஸந்த லீலாமிருதம் என்னும் மஹீபதி இயற்றிய நான்கு காப்பியங்களைப் போலவே கவி தாஸகணுவும் இரு வேறு காப்பியங்கள் இயற்றியிருக்கிறார்.
பிற்காலத்தைச் சேர்ந்த இவை இரண்டில் ஒன்று பக்தலீலாமிருதம், மற்றது ஸந்தலீலாமிருதம். இரண்டுமே சமீப காலத்தில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும், ஞானியர்களையும் பக்தர்களையும் பற்றியவைதான். பக்தலீலாமிருதத்தில் மூன்று அத்தியாயங்களில் மனத்தைச் சுண்டி இழுக்கும் ஸ்ரீ ஸாயீயின் வாழ்க்கை விவரிக்கப்பட்டிருக்கிறது. பக்தர்கள் தாங்களே இதைப் படித்துக்கொள்ளலாம்.
அது போலவே, ஸந்த கதாமிருதத்திலும் 57ஆவது அத்தியாயத்தில், ஸாயீ, பக்தர் ஒருவருக்குச் சொன்ன, ஞான அமுதமானதும் சுவாரசியமானதுமான கதை ஒன்று விவரிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், ரகுநாத் தேண்டூல்கரும் ஸாவித்திரிபாயி தேண்டூல்கரும் தங்களுடைய சொந்த அனுபவத்திருந்து ஸாயீயின் அற்புதமான லீலைகளைப் பதங்களாகவும்[ மராட்டி இசைச்செய்யுள் வடிவங்கள் ]அபங்கங்களாகவும்1 வடித்து, 'ரகுநாத்-ஸாவித்திரி பஜன்மாலாஃ என்னும் பாமாலையைத் தொடுத்திருக்கின்றனர். இது ஜனங்களுக்கு மங்களம் அளிக்கக்கூடிய ஊற்றாக அமைந்திருக்கிறது.
பாபாவின் அருட்செல்வர் ஒருவர்[ ஹரி ஸீதாராம் தீக்ஷிதர்} பாபாவின் மீதான அபரிமிதமான அன்பினால் இதே பஜன்மாலாவுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். இம் முன்னுரை தாகம் மிகுந்த சகோரப் பட்சிகளுக்கு (சகோரம் - இதிஹாஸங்களில் இடம் பெறும் ஒரு பறவை. எவ்வளவு தாகமாக இருப்பினும் பூமியிலுள்ள நீரை அருந்தாது; மேகத்திலுள்ள நீரையே அருந்தும். பக்தர்களுக்கு) அமுத மழையாகும். வாசகர்கள் இதை பயபக்தியுடன் பருக வேண்டும்.
கவி தாஸகணுவினுடைய பல்சுவைக் கவிதைகள் உணர்ச்சிமயமானவை. பாபாவின் லீலைகளை இக் கவிதைகளில் படிக்கும்போது வாசகர்கள் ஆனந்தமடைவர். அமீதாஸ் பவானிதாஸ் மேதா என்னும் பக்தரும் பாபாவின் அற்புதங்கள் நிறைந்த கதைகளை மிகுந்த பிரேமையுடன் குஜராத்தி மக்களுக்காகப் பிரத்யேகமாக (குஜராத்தி மொழியில்) எழுதியிருக்கிறார். இவை மட்டுமல்லாமல், புணேயிருந்து சில பக்த சிரோமணிகள் பாபாவைப்பற்றிய கதைத்தொகுப்பு ஒன்றை 'ஸாயீ பிரபாஃ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். இவ்வகையில் இத்தனை இலக்கியங்கள் ஏற்கெனவே இருக்கும்போது, இன்னும் ஒரு புத்தகம் எதற்காக? வாசகர்கள் மனத்தில் இந்த சந்தேகம் எழலாம்; நிராகரித்துவிடாமல் என்னுடைய பதிலைக் கேளுங்கள்.
[தொடரும்]


No comments:
Post a Comment