ஸாயீயினுடைய சரித்திரம் ஒரு மஹாஸமுத்திரம்;
முடிவில்லாததும் அபாரமானதும் ரத்தினங்கள் நிறைந்ததுமான சுரங்கம். சிட்டுக்குருவியான நான் இந்த ஸமுத்திரத்தைக் கடக்க செய்ய முயற்சி செய்கிறேன். இது எவ்வாறு நடக்கும்? ஸாயீயினுடைய சரித்திரம் ஆழங்காணமுடியாதது; பூரணமாகவும் திருப்தியளிக்கும் வகையிலும் எடுத்துரைக்கமுடியாதது. முழுத்திறமையுடன் முடிந்தவரை சொல்லி விட்டு மனத்தைச் சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான். துன்பத்தில் உழலும் மக்களுக்கு சாந்தி அளிக்கக்கூடிய, பாபாவின் அபூர்வமான கதைகள் எண்ணற்றவை. உண்மையான பக்தர்களுக்கு மேலும் மேலும் கேட்கவேண்டுமென்ற ஆர்வத்தையூட்டி, திடமான சித்தத்தை நல்குகின்றன.
உலகெங்கும் பரவியுள்ள ஷீரடி சாய்பாபா
ஆலயங்களில் ஒன்றான அமெரிக்காவில்
பிளாரிடாவில் உள்ள ஆலயத்தின் த்வாரகமயி
உலகெங்கும் பரவியுள்ள ஷீரடி சாய்பாபா
ஆலயங்களில் ஒன்றான அமெரிக்காவில்
பிளாரிடாவில் உள்ள ஆலயத்தின் த்வாரகமயி
பாபா சொன்ன கதைகள் பலவிதமானவை; சில உலகியல் ஞானம் அளிப்பவை; சில அனைவருக்கும் பொதுவான அனுபவம்; சில அவருடைய புதிரான செயல்களைப் புரியவைப்பவை. தெய்வீகமானவையும் கணக்கற்றவையுமான வேதகாலத்துக் கதைகள் எவ்வாறு பிரபலமோ, அவ்வாறே பாபா சொன்ன அநேக அர்த்தபுஷ்டியுள்ளவையும் மதுரமானவையுமான கதைகள் பிரபலம்.
மன ஒருமையுடன் கேட்கப்படும்போது பசியும் தாகமும் மறந்துபோகும்; மற்ற இன்பங்களைத் துரும்பாக்கிவிட்டு ஆழமான அமைதி செங்கோலோச்சும்.
சிலர் பிரம்மத்தோடு ஐக்கியமாவதை நாடுவர்; சிலர் அஷ்டாங்கயோகத்தில் தேர்ச்சியைத் தேடுவர்; மேலும் சிலர் ஸமாதி நிலையின் முழுமையான சுகத்தை நாடுவர்; இந்தக் கதைகளைக் கேட்டால் அவர்களனைவருக்கும் நாடியதும் தேடியதும் கிட்டும்.
இக் கதைகளைக் கேட்பவர்கள் கர்மபந்தத்திருந்து விடுவிக்கப்படுகிறார்கள்; புத்தியும் பிரகாசம் அடைகிறது; ஏற்றத்தாழ்வு ஏதுமின்றி அனைவரும் சுகம் பெறுகிறார்கள். இக் காரணம்பற்றி, ஒன்றுசேர்ப்பதற்குகந்த இவ் வண்ணவண்ணக் கதைகளைத் தொகுத்து, மாலையொன்று கட்டவேண்டும் என்னும் அவா என் மனத்தெழுந்தது. இதுவே, சிறந்த உபாஸனை (வழிபாட்டுமுறை) என்று நான் கருதினேன்.
இக் கதைகளின் சில வார்த்தைகள் தற்செயலாகக் காதில் விழுந்தாலே அந்த ஜீவனுடைய துரதிருஷ்டம் உடனே பின்வாங்குகிறது. இவ்வாறிருக்கையில், நம்பிக்கையுள்ள எளிய பக்தர் பயபக்தியுடன் கதை முழுவதையும் கேட்டால், நிச்சயமாக இவ்வுலகவாழ்வெனும் ஸமுத்திரத்தைக் கடந்துவிடுவார். என்னை எழுத்தாணியாக்கி, என் கையைப் பிடித்துக்கொண்டு, அக்ஷரங்களை பாபா உருவாக்குவார். பாபா வழிகாட்ட, இயந்திர கதியில் இயங்கும் கருவி மாத்திரமே யான்.
ஆண்டாண்டாக பாபாவின் லீலைகளை நேரில் கண்டதால், அன்புள்ள எளிய பக்தர்களின் நன்மை கருதி, பாபாவின் கதைகளனைத்தையும் ஒன்றுசேர்க்க வேண்டும் என்னும் அவா என் மனத்து உருண்டு விளையாடியது. கண்களுக்கு விருந்தாகும் வகையில் பாபாவைப் பிரத்யக்ஷமாக தரிசனம் செய்ய வாய்ப்பின்றிப் போனவர்கள், அவருடைய மஹாத்மியத்தைக் காதால் கேட்டாவது புண்ணியம் சேர்க்கலாம். பாக்கியவானாகிய ஒருவருக்கு இக் கதைகளைப் படிக்க வேண்டுமென்ற தாகம் ஏற்பட்டால், அவ்வாறு செய்வதால் அவர் பரமானந்தத்தையும் அக அமைதியையும் பெறுவார்.
இம் மாதிரியான எண்ணங்கள் என் மனத்தே எழுந்தன; இதை நான் மாதவராவுக்குத் தெரிவித்தேன். ஆயினும் இக் காவியத்தை என்னால் எழுதமுடியுமா என்ற சந்தேகம் என்னை உறுத்திக்கொண் டிருந்தது. ஏனெனில், எனக்கு அப்பொழுது அறுபது வயதுக்கு மேலாகிவிட்டது. அறுபது வயதில் இந்தப் பாழாய்ப்போன புத்தி, பிரச்சினைகளையும் முட்டுக்கட்டைகளையுமே உற்பத்தி செய்ய முயல்கிறது. மேலும், தளர்ந்துபோன உடல் பிரம்மாண்டமான இம் முயற்சியைத் தடுத்தாலும் தடுக்கலாம். கடைசியில் பார்த்தால் எழுதியதெல்லாம் ஒரே பிதற்றலாக முடியலாம். ஆயினும், பயனற்றதும் அர்த்தமில்லாததுமான செயல்களைச் செய்துகொண்டு வாழ்வதைவிட, ஸாயீயின் ஸேவையில் ஈடுபடுவதே சிலாக்கியம் (சிறப்பு). ஆன்மீக வளர்ச்சி பெறலாம்; ஆகவே இந்த யத்தனம்.
இரவுபகலாக நான் கண்டனுபவித்த நிகழ்ச்சிகளை விவரமாக எழுதிவைத்துவிட வேண்டுமென்ற எண்ணம் என்னுள் தோன்றியது. எழுதிவைத்ததை அசை போட்டால் சாந்தியும் விச்ராந்தியும் (இளைப்பாறுதல்) லாபமாகும். ஆத்மானுபவத்தின் அஸ்திவாரமும் ஆத்மதிருப்தியை அளிப்பதும் பாபா அடிக்கடி சரளமாக விடுத்ததுமான அமுதமொழிகளை நான் மற்றவர்களுக்கும் கிடைக்கவைக்க விரும்பினேன்.
பாபா சொன்ன, ஞானத்தை அருளும் கதைகள் எத்தனையோ! பக்தி மார்க்கத்தை வழியாகக் காட்டப்பட்ட பக்தர்கள் எத்தனையோõ இவையனைத்தையும் நான் தொகுத்துவிட்டேனானால் அது ஸாயீ பாபாவின் புராணமாக அமைந்துவிடும். இக் கதைகளை பயபக்தியுடன் சொல்பவர்களும் கேட்பவர்களும் பூர்ணசாந்தியையும் விச்ராந்தியையும் அனுபவிப்பார்கள். பாபாவின் திருமுகத்திருந்து வெளிப்பட்ட இக் கதைகளைக் கேட்டால், பக்தர்கள் உடல் உபாதிகளை மறந்துவிடுவார்கள்; இடைவிடாது தியானம் செய்தால், உலகியல் தளைகளிருந்து விடுபடுவார்கள்.
பாபாவின் திருமுகத்திருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் தேவாமிருதம் போன்று இனிப்பவை; கேட்டால் பரமானந்தம் விளையும்; நான் எவ்விதம் இவ்வார்த்தைகளின் மதுரத்தை (இனிமையை) விவரிப்பேன்?
ஒருவர்வித்துவான் போலவும் பேரொழுக்கமுடையவர் போன்றும் நடிக்காமல், இக்கதைகளை யாராவது பிரவசனம் (விரிவாக மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல்) செய்தால், அவருடைய பாததூளிகளில் விழுந்து புரண்டாலே எனக்கு மோக்ஷம் நெருங்கும் என்பதை உணர்கிறேன். இக் கதைகள் சொல்லப்படும் அசாதாரணமான பாணியும் கற்பனை வளத்துடன் பிரயோகிக்கப்பட்ட வார்த்தைகளும் சொற்றொடர்களும் கேட்பவர்களை மெய்மறக்க வைத்து எல்லாருக்கும் மிகுந்த ஆனந்தத்தை அளிக்கும். காதுகள் இக் கதைகளைக் கேட்கவும் கண்கள் அவரை தரிசனம் செய்யவும் ஏங்குவதுபோல, மனம் தெய்வீகமான தியானத்தில் மூழ்கி, பிரக்ஞையை இழந்துவிடும்.
அன்பான குருவே என் அன்னை. அவருடைய கதைகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வாய்மொழிச் செய்தியாகப் பரவும் போது, நாம் பயபக்தியுடன் அவற்றைக் காதுகளால் கேட்டுச் சேமித்து வைத்துக்கொள்வோம். இக் கதைகளை நாம் திரும்பத் திரும்ப மனத்தில் ஓடச்செய்வோம். அன்பெனும் கயிற்றால் கட்டி எத்தனை முடியுமோ அத்தனை சேமிப்போம். பிறகு இப் புதையலைப் பரஸ்பரம் ஸமிருத்தியாகப் (தேவைக்கு மேலாகவே) பகிர்ந்துகொள்வோம்.
இவையனைத்திலும் என்னுடையது ஒன்றுமேயில்லை; இயக்கம் முழுக்க முழுக்க ஸாயீநாதனைச் சேர்ந்ததே. கவனியுங்கள்õ அவர் எதைச் சொல்லச் சொல் என்னை உந்துகிறாரோ, அதையே நான் சொல்கிறேன்.
அடடா! நான் சொல்கிறேன் என்று சொல்வது அஹங்காரம்; சூத்ரதாரி ஸாயீயே. என்னுடைய நாவை அசைப்பதே அவர்தான். நான் பேசுகிறேன் என்று சொல்லிக்கொள்வதற்கு எனக்கென்ன தகுதி இருக்கிறது? அஹங்காரத்தை பாபாவின் பாதகமலங்களில் ஸமர்ப்பித்துவிட்டால் அபாரமான சுகம் விளையும். அஹங்காரம் நாசமாகிவிட்டால் வாழ்க்கை ஸந்தோஷமயமாகிவிடும்.
இந்தத் திட்டம் எனக்குத் தோன்றியபோது பாபாவிடம் இதைத் தெரிவிக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோதிலும், தைரியம் வரவில்லை. தற்செயலாக மசூதியில் மாதவராவைப் பார்த்தேன். உடனே அவரிடம் என்னுடைய எண்ணங்களைத் தெரிவித்தேன். வேறு எவரும் அந்நேரத்தில் அங்கு இல்லை. மாதவராவ் கிடைத்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டு பாபாவைக் கேட்டார்.
''பாபா! இந்த அண்ணாஸாஹேப்1 தாபோல்கர், நீங்கள் அனுமதி கொடுப்பதாக இருந்தால் உங்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தைத் தம்முடைய முழுத்திறமையையும் காட்டி எழுத விரும்புவதாகச் சொல்கிறார்.--
''நான் ஒரு பிச்சைக்காரன்; வீடுவீடாக இரந்து, சேர்த்துண்ண காய்கறி பதார்த்தங்கள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சோளரொட்டியைத் தின்று ஏதோ காலம் தள்ளுகிறேன்.--
''என்னைப் போன்ற பிச்சைக்காரன் ஒருவனுடைய சரித்திரத்தை ஏன் எழுத விரும்புகிறாய்? பரிஹாஸத்திற்குக் காரணம் ஆகிவிடுமே! என்று சொலலிவிடாதீர்கள். ரத்தினத்தைப் பதக்கத்தில் பொருத்துவதே சிறப்புஃஃ. (மாதவராவ்)
[அனுமதியை ஈந்து உதவியும் செய்தீரானால் காவியம் தன்னைத்தானே எழுதிக் கொண்டுவிடும். இல்லை, இல்லை, பாதையில் நேரும் தடைகளனைத்தையும் நீக்கி, நீர் என்னை எழுத வைப்பீர். ஞானிகளின் ஆசிகளே ஒரு புத்தகத்தின் மங்களகரமான ஆரம்பம்; உம்முடைய கடைக்கண் பார்வையின்றி என்னுடைய எழுதுகோல் ஓடாது. இது எனக்குள் எண்ண ஓட்டம்) ]
என்னுடைய எண்ண ஓட்டத்தை அறிந்துகொண்ட ஸமர்த்த ஸாயீ கருணையால் ததும்பி, ''உம்முடைய மனோரதம் நிறைவேறும்" என்று கூறினார். நான் உடனே அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினேன்.
வரம் தரும் கரத்தை என் சிரத்தின்மேல் வைத்து, எனக்கு உதியைப் (திருநீறு) பிரஸாதமாக அளித்தார்.
சகல தர்மங்களிலும் விற்பன்னரான இந்த ஸாயீ, பக்தர்களை உலக பந்தங்களினின்று விடுவிப்பவர் அல்லரோ!மாதவராவினுடைய வேண்டுகோளைக் கேட்ட ஸாயீ, என்மீது இரக்கம் கொண்டு, பொறுமையற்றுக் கொந்தளித்துக் கொண்டிருந்த என் மனத்தை சாந்தப்படுத்துவதற்காக எனக்கு தைரியமூட்ட ஆரம்பித்தார்.
என்னுடைய நேர்மையான நோக்கத்தை அறிந்துகொண்டார் ஸாயீ. அனுமதியைத் தெரிவிக்கும் வகையில் அவருடைய திருமுகத்திருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன, ''அனுபவங்கள், சம்பாஷணைகள், பேச்சு, வாஸ்தவமான கதைகள் போன்றவற்றைத் தொகுத்துக்கொள்வீராக 2.--
''குறிப்பெடுத்துக்கொள்வதே நன்று; என்னுடைய முழமையான ஆதரவு அவருக்கு உண்டு. அவர் ஒரு கருவி மாத்திரமே; என்னுடைய சரித்திரத்தை நானே எழுதுவேன்.-- ''என்னுடைய சரித்திரத்தை நானே எழுதி என் பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன். 'நான்' எனும் எண்ணத்தை வென்று, அதை என் பாதங்களில் அவர் ஸமர்ப்பிக்க வேண்டும்.--
''இவ்வாறு வாழ்க்கை நடத்தும் ஒருவருக்கு நான் காவியம் எழுத முழு ஆதரவு நல்குவதுமட்டுமல்லாமல், அவருக்காக எல்லா வழிகளிலும் கடுமையாக உழைப்பேன்.--
''அஹங்காரத்தையும் கர்வத்தையும் நிழலும் படாதவாறு முழுமையாக அவர் அழித்துவிட்டால், நான் அவருள் புகுந்து என்னுடைய கையாலேயே இக்காவியத்தை எழுதுவேன்.
''செவிமடுக்கவோ சிந்திக்கவோ எழுதவோ ஆரம்பிக்கும்போது, மேற்சொன்ன எண்ணம் அவரை ஆட்கொள்ளுமேயானால், அவரைக் கருவியாக மாத்திரம் வைத்துக்கொண்டு, அந்த வேலையை நானே செய்து முடிப்பேன்.--
''குறிப்புகளென்னவோ எழுதப்படவேண்டும். வீட்டிற்குள் இருந்தாலும் வெளியிருந்தாலும் எங்கிருந்தாலும் திரும்பத் திரும்ப என்னை நினைத்தால் நீர் சாந்தியை அனுபவிப்பீர்.--
''என் கதையைச் செவிமடுத்தலும் கீர்த்தனமாக மற்றவர்களுக்குப் பிரவசனம் செய்தலும் தியானித்தலும் என்மீது அன்பையும் பக்தியையும் பெருக்கும்; அஞ்ஞானத்தைக் கடிதே ஒழிக்கும்.--
''எங்கு பக்தி, சிரத்தை இரண்டுமே இருக்கின்றனவோ, அங்கு நான் சேவகனாக என்றும் இருக்கிறேன்; சந்தேகமே வேண்டா. இவ்விரண்டும் இல்லையெனில் நான் என்றுமே எட்டிப்பிடிக்க முடியாதவனாகவே ஆகிறேன்.--
''ஒன்றிய மனத்துடனும் நல்லுணர்வுகளுடனும் செவிமடுக்கப்படும்போது, இக்கதைகள் பக்தியை ஊட்டும்; ஆத்மானுபவமும் ஆனந்தமும் இயல்பாகவே மலரும்; நித்திய சுகம் லாபமாகும்.--
''ஜீவனும் சிவனும் சுருதி சேர்ந்து, பக்தன் தன்னை அறிந்துகொள்வான். குணாதிசயங்கள் ஏதுமற்ற, புரிந்துகொள்ளமுடியாத வஸ்துவைப் புரிந்துகொள்வான். இறை அவனுக்குத் தன்னைத்தானே வெளிப்படுத்திக் காட்டும்
''என்னுடைய கதைகளின் பலனும் பரிசும் இவையே; வேறென்ன வேண்டும்? வேதங்களின் இறுதி இலக்கும் இதுவே; இதை அடைந்தவன் எல்லாமடைந்தவனாவான்.
''எதற்கெடுத்தாலும் வாதம் செய்பவன் அஞ்ஞானத்தையும் மாயையையும் அபரிமிதமாக வளர்ப்பான். தனக்கு ஹிதத்தையும் (நன்மையையும்) பரிசுத்தத்தையும் நல்கும் எண்ணமே தோன்றாமல், சதா துர்ப்புத்தியிலும் குதர்க்க வாதங்களிலுமே உழன்றுகொண் டிருப்பான்.-- ''இம் மனிதன் ஆத்மஞானத்திற்குப் பாத்திரமல்லன்; இவன் மாயையிலேயே மூழ்கிப் போகிறான்; இகத்திலும் சுகம் இல்லை; பரத்திலும் சுகம் இல்லை; எங்கும் எப்பொழுதும் இவனால் சுகம் அடைய முடிவதில்லை.--
''நம் கட்சியையே (கோட்பாடு) நிர்த்தாரணம் செய்ய வேண்டும், மாற்றான் கட்சியை நிராகரித்துவிட வேண்டும், என்னும் எண்ணங்கள் நமக்கு வேண்டா; எதிரும் புதிருமான கருத்துகளின்மேல் விவாதமும் வியாக்கியானமும் வேண்டா; எதற்காக இந்த வீண்முயற்சிகள்?ஃஃ [ 'எதிரும் புதிருமான கருத்துகளின்மேல் விவாதமும் வியாக்கியானமும் -- இச்சொற்றொடர், ஏற்கெனவே நான் வாசகர்களுக்கு அளித்திருந்த வாக்கை ஞாபகப்படுத்துகிறது. ]
முதல் அத்தியாயத்தின் முடிவில், 'ஹேமாட்ஃ என்று நான் நாமகரணம் (பெயரிடுதல்) செய்யப்பட்ட விவரத்தை எல்லாருக்கும் சொல்வதாக வாக்களித்திருந்தேன். கதைக்குள் கதையான இதைக் கேட்டால் உங்களுடைய ஆர்வம் திருப்தியுறும்; பொருத்தமான பெயரா அல்லது பொருத்தமில்லாததா என்றும் நீங்கள் தீர்மானிக்கலாம். உண்மையில் இதை ஞாபகப்படுத்துபவரும் ஸாயீயே. அதற்குப் பிறகு, ஸாயீயின் பிரதானமான காதை விட்ட இடத்திருந்து தொடரும். ஆகவே, இக் காதையை கவனமாகக் கேளுங்கள். [தொடரும்]
இந்த திவ்ய சரித்திரத்தை கணினி மூலமும்.மொபைல் மூலமும் வாட்ஸ் அப்பிலும் கிண்டிலிலும் வாசித்து வரும் தங்களுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள். உங்கள் நண்பர்களையும் வாசிக்கச்செய்யுங்கள். உங்கள் வாசிப்பின் பலன் கூடுதலாகும் பாபாவின் ஆசி இரட்டை மடங்காகக்கிட்டும்
இந்த திவ்ய சரித்திரத்தை கணினி மூலமும்.மொபைல் மூலமும் வாட்ஸ் அப்பிலும் கிண்டிலிலும் வாசித்து வரும் தங்களுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள். உங்கள் நண்பர்களையும் வாசிக்கச்செய்யுங்கள். உங்கள் வாசிப்பின் பலன் கூடுதலாகும் பாபாவின் ஆசி இரட்டை மடங்காகக்கிட்டும்

No comments:
Post a Comment